கன்னியாகுமரி அருகே திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு புறப்பட்ட மணப்பெண்ணை பிரிய மனமின்றி அவர் வளர்த்த செல்ல பிராணி நடத்திய பாசபோராட்ட காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்துள்ளது..
முன்பெல்லாம் பெத்த மகளை திருமணம் செய்து கொடுக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும், செல்ல மகள் தங்களை பிரிந்து கணவன் வீட்டிற்கு செல்லும் போது ஆனந்த கண்ணீருடன் வழியனுப்பி வைத்து வழக்கம்..!
இப்போது காலங்கள் மாறி, போக்குவரத்தும், தகவல் தொடர்பும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளதால், இது போன்ற நெகிழ்வான நிகழ்வுகளை காண்பதே அரிதானதாக மாறிப்போய்விட்டது.
ஆனால், அந்த காலம் மட்டுமல்ல இந்த காலத்திலும் மனிதர்களிடம் பழகுவதிலும் தனது நன்றியுணர்ச்சியை வெளிக்காட்டுவதிலும் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கு இணை யாரும் இல்லை என சொல்லும் அளவுக்கான சம்பவம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது..
நாகர்கோவில் அடுத்த சித்திரைதிருமகாராஜபுரம் பகுதியை சேர்ந்த சுயம்புச்செல்வன் என்பவரது மகள் சுகப்பிரியாவுக்கு கடந்த இருதினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சுகப்பிரியா வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்துவந்தார். திருமணம் முடிந்த அன்று மணமகன் வீட்டிற்கு புறப்பட தயாரானார் சுகப்பிரியா. இதைப் பார்த்த வளர்த்தநாய் இடைவிடாமல் குரைக்கதொடங்கியது..
செல்லப்பிராணியை சமாதானப்படுத்த தனது கணவருடன் சென்ற மணப்பெண் சுகப்பிரியாவை விடாமல் தனது கால்களை தூக்கிபோட்டு பற்றிகொண்டது..
நீண்டநேரம் வளர்ப்பு நாயின் பாசப்போராட்டத்தை பார்த்து திருமணத்துக்கு வந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். வளர்ப்பு நாயை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாமல் கனத்த இதயத்துடன் சென்ற மணப்பெண்ணின் சேலை முந்தானையை பற்றிப்பிடித்து, தாயை பிரியும் சேய் போல அந்த நாய் பரிதவித்த காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது