பெங்களூருவில் டியுக் பைக்கை திருடிய புள்ளீங்கோக்களை,ஜீபிஎஸ் உதவியுடன் பைக்கின் உரிமையாளரான ஐ.டி.ஊழியர் விரட்டி வந்து பிடித்த சம்பவம்..
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபெருமாள் என்பவர் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் கணினி பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு ஜெயபெருமாள் , தனது டியூக் இரு சக்கர வாகனத்தை தான் நண்பர்களுடன் தங்கி இருந்த வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு உறங்க சென்றார்.
அதிகாலை ஜெயபெருமாளின் செல்போனுக்கு அவரது வாகனம் ஸ்டார்ட் செய்யப்படுவதாக அலர்ட் மெசேஜ் வந்தது.
அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்ததால் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதை கவனிக்கவில்லை.
அந்த டியூக் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியிலிருந்து வந்த குறுஞ்செய்தியை செல்போனில் காலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ஜி.பி.எஸ் மூலம் பைக் இருக்கும் லொகேசனை பார்த்தார்.
பைக் பெங்களூருவில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நண்பர்களின் இருசக்கர வாகனத்தில் தனது பைக் எடுத்துச்செல்லப்பட்ட வழியில் பின் தொடர்ந்தார். 4 மணி நேர பயணத்துக்கு பின் அவரது வாகனம்
நீண்ட நேரமாக ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள காட்டு கொள்ளை என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆம்பூர் பகுதியை சேர்ந்த நண்பர்களின் உதவியுடன் காட்டுக் கொள்ளை பகுதிக்கு விரைந்த ஜெயபெருமாள் அங்கு இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த புள்ளீங்கோ கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், இருசக்கர வாகனத்தை பெங்களூருவில் இருந்து திருடி வந்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், அஜய், சக்திவேல், விஷ்வா, கணேஷ் ஆகிய ஐந்து பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை உரிமையாளரே gps வசதியுடன் பின்தொடர்ந்து வந்து நான்கே மணி நேரத்தில் கண்டறிந்து கொள்ளையர்களை காவல்துறையினிடம் பிடித்துக் கொடுத்துள்ளார்.