நாகை மாவட்டத்தில் 64 ஆயிரம் ஹெக்டர் சம்பா பயிர்கள், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தலைஞாயிறு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 3 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வை தொடங்கியுள்ளனர்.
சென்னை தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூரு தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், ஒய்.போயோ ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பயிர்களை விவசாயிகள் அப்போது காண்பித்த நிலையில், நெல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மாதிரிகளை சேகரித்து, மத்தியக்குழுவினர் எடுத்துச்சென்றனர்.
நாகை மாவட்டத்தில் 7 இடங்களில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் நெல் மற்றும் பயிர் சேதங்களை ஆய்வு செய்து, மத்திய அரசிடம் அக்குழுவினர் அறிக்கை அளிக்கவுள்ளனர்.
பருவம் தவறிய மழையால், தமிழக டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.