டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களில் 33 சதவீதத்திற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால், ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு, ஏக்கருக்கு 3 ஆயிரம் ரூபாயும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய, 50 சதவிகித மானியத்தில் ஏக்கருக்கு எட்டு கிலோ பயறு விதைகளும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நெல் அறுவடையை உடனே மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகித மானியத்தில், நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கனமழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப்பின், மழை பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.