திருநெல்வேலி மேலப்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பள்ளியின் தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பள்ளியின் தாளாளர் குதுப்தீன் நஜீப் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி மாணவிகள் பள்ளி வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த பெற்றோர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினரும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆனந்த பிரகாஷ் உள்ளிட்டோர் பள்ளிக்கு வந்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நேற்றிரவு பள்ளி நிர்வாகத்தினர் தாளாளர் குதுப்தீன் நஜீப்பை பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடம் 2 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று காலை கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா, பள்ளியின் முதல்வர் காதரம்மாள் ஆகியோரும் குதுப்தீன் நஜீப்பிற்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டனர்.