காசநோயால் உயிரிழந்த தந்தை பில்லி சூனியத்தால் கொல்லப்பட்டதாக கருதி, 10 வருடங்கள் இணக்கம் இல்லாமல் இருந்த சித்தப்பாவை கொலை செய்த இளைஞர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் அருகே பெரியப்பட்டி சாவடி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன், இவரது இளைய சகோதரர் ஆறுமுகம். கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த நிலையில் கடந்த 10 வருடத்திற்கு முன் ஏற்பட்ட இடப்பிரச்சனை காரணமாக பிரிந்து எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த முருகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அண்ணனின் உடலை பார்க்கச் சென்ற ஆறுமுகத்தை, முருகனின் மகன் விஜய் என்பவர் பார்க்கவிடாமல் தடுத்ததால் இரு குடும்பத்தாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த முருகனின் சகோதரர் ஆறுமுகத்தை சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று தடயங்களை சேகரித்தனர்.
கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் சம்பவ இடத்திலிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். ஆறுமுகத்தின் மனைவி சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
முருகனின் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறை வைத்து உறவினர்களிடம் விசாரணையை தொடங்கிய போலீசார், முருகனின் மகன் விஜயை பிடித்து விசாரித்தனர். இதில் ஆறுமுகம் கொலைக்கான பின்னணி அம்பலமானது.
மூன்று ஆண்டுகளாக தனது தந்தை உடல் ரீதியான பிரச்சனையால் அவதிப்பட்ட போது எட்டிப் பார்க்காத சித்தப்பா, அவர் இறந்த பின் இறுதிச்சடங்கிற்கு வந்தது பிடிக்கவில்லை என்றும், சித்தப்பாதான் தனது தந்தைக்கு பில்லி சூனியம் வைத்ததாக குடும்பத்தினருக்கு சந்தேகம் இருந்ததால் நண்பர்களை வைத்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகத்தைக் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை தொடர்பாக விஜய் , அவனது நண்பர்களான ராம்பிரசாத், இன்பதமிழ், மணிகண்டன், விஜய்-யின் தாய்மாமா அய்யர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பில்லி சூனியத்தை உண்மை என்று நம்பி சித்தப்பா ஆறுமுகத்தை கொன்றதால் விஜய் மட்டுமல்ல, அவனது நண்பர்களும் கொலை வழக்கில் சிக்கி கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.