தூத்துக்குடி சமுத்ரா ஓட்டலுக்கு வெளியே சவர்மா தயார் செய்ய வைத்திருந்த சிக்கனை நாய் தின்ற வீடியோ வெளியானதை தொடர்ந்து ஓட்டலுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் சமுத்ரா என்ற பெயரில் பேமிலி ரெஸ்டாரண்ட் இயங்கி வந்தது. இந்த ஓட்டலுக்கு வெளியே உள்ள சாலையின் பிளாட்பாரத்தில் சவர்மாவுக்கான சிக்கனை வேகவைக்கும் மிஷின் வைத்துள்ளனர்.
அப்படி தெருவில் எந்த ஒரு சுகாதாரமுமின்றி வைக்கப்பட்டிருந்த சவர்மா சிக்கனை அந்த வழியாக சென்ற தெரு நாய் ஒன்று எட்டிப்பிடித்து தின்றது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் சமுத்ரா ஓட்டல் நிர்வாகம் இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறைத்து சொமோட்டா, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் சிக்கன் சவர்மா விற்றுவந்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்த புகாரின் பேரில் அந்த ஓட்டலில் ஆய்வு நடத்திய உணவு பொருள் பாதுகாப்புத்துறையினர் ,அங்கு பாதுகாப்பற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதை உறுதி செய்தனர்.
திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் சவர்மா தயாரித்து விற்ற சமுத்ரா ஓட்டலை இழுத்துப் பூட்டி சீல் வைத்தனர்.
வீட்டில் இருந்தபடியே உணவு பொருள் வாங்கி உண்ணும் உணவுப்பிரியர்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்... இல்லையேல் பார்சலில் வருவது பாதுகாப்பற்ற உணவாகவும் இருக்கலாம் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி