கோவையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் ஏ.டி.எம் அட்டைகள் மற்றும் பணத்தை திருடியதாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சிங்காநல்லூர் தேவேந்திர வீதியை சேர்ந்த கல்லூரி மாணவியான கலைசெல்வி, தாயாருடன் தனியார் மருத்துவமனைக்கு பேருந்தில் சென்றுள்ளார். பின்னர் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற கலை செல்வி தனது பையில் மணிபர்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தம் வந்தபோது, அவர்களை கண்டதும் 2 பெண்கள் தப்பி ஓட முயன்றுள்ளனர். சந்தேகமடைந்து கலைசெல்வி, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் 2 பெண்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் 2 பெண்களும் கிருஷ்ணகிரியை சேர்ந்த லட்சுமி, சித்ரா என்பதும், ஏடிஎம் அட்டைகள் மற்றும் 84,450 ரூபாய் ரொக்கத்தை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.