சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலின் கதவு ஓரத்தில் நின்று செல்போன் பேசி கொண்டு சென்ற CISF வீரரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு மர்ம நபர் ஒருவர் , அவரை கீழே தள்ளி விட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் கதறி அழுது சமூக ஆர்வலரின் காலை பிடித்து உதவி கேட்டு கதறும் காட்சி வெளியாகி உள்ளது.
சென்னை கொருக்குபேட்டை ரெயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்ற போது அந்த ரெயிலில் இருந்து 6 அடி உயரம் உள்ள இளைஞர் ஒருவர் கீழே விழுந்தார். குழந்தை போல கதறி அழுத அவரிடம் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் விசாரித்தனர்
அவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான விவேக் குமார் என்பதும் சட்டீஸ்கர் மாநிலத்தில் CISF என்றழைக்கப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
ரயில்வே பாதுகாப்பு பணிக்காக திருவனந்தபுரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, மதுரையில் மெடிக்கல் செக்கப் செய்து விட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விஜயவாடா செல்லக்கூடிய கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்து உள்ளார்.
கொருக்குப்பேட்டை ஹரி நாராயணபுரம் அருகே ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது கதவு ஓரத்தில் நின்று செல்போனில் பேசி கொண்டு இருந்த போது மர்நபர் ஒருவர் செல்போனை பறித்துக் கொண்டு கீழே தள்ளியதாக விவேக் தெரிவித்தார்.
தனது செல் போன் மட்டுமில்லாமல் தனது உடமைகள் கல்விச்சான்றிதழ்கள் எல்லாம் ரயிலில் சென்று விட்டதாகவும் கதறி அழுதார். அப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேசன் என்பவர் அழுது கொண்டு இருந்த விவேக்கை அழைத்த போது அவரது காலில் விழுந்து கத்தி அழுது உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
சி.ஐ.எஸ்.அப் வீரரை ஆசுவாசப்படுத்திய வெங்கடேசன், தனது செல்போன் மூலம் விவேக் நம்பரை தொடர்பு கொண்ட போது 10 மீட்டர் தூரத்தில் தண்டவாளத்தின் ஓரத்தில் செல்போன் சத்தம் கேட்டது. உடனடியாக செல்போனை மீட்டு கொடுத்துள்ளார்.
விவேக் தனது உடைமைகளை ரெயிலில் தவறவிட்டது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஓங்கல் பகுதியில் ரயில்வே போலீசார் விவேக் உடைமைகளை பத்திரமாக எடுத்து வைத்தனர்.
இதனையடுத்து விவேக் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஓங்கல் சென்று, தவற விட்ட தனது உடைமைகளை எடுத்து கொண்டு விஜயவாடாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக விவேக் நிலைதடுமாறி ரெயிலில் இருந்து விழுந்திருக்கலாம் என்றும் அதனால் தான் அவரது செல்போனும் அங்கேயே விழுந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டிய ரெயில்வே போலீசார், விழுந்த வேகத்தில் யாரோ தன்னை தள்ளிவிட்டதாக அவர் எண்ணிக் கொண்டதால் பதற்றத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
பீகாரியாக இருந்தாலும் கண்ணீர் விட்டு கதறினால் உதவிக்கரம் நீட்டுவதில் தமிழன் எவருக்கும் சளைத்தவன் அல்ல என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு சாட்சி..!