பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை பிடித்த மாடுபிடிவீரர் அரவிந்தராஜ் காளை முட்டியதில் பரிதாபமாக பலியானார். ஜல்லிக்கட்டு முடிந்து திருமணம் நடக்க இருந்த நிலையில் நிகழ்ந்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
மதுரை, பாலமேடு கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் - தெய்வானை தம்பதிக்கு இரண்டு மகன்கள். இவர்களின் முதல் மகன் நரேந்திர ராஜ் சென்னையில் தந்தை ராஜேந்திரனுடன் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இரண்டாவது மகன் 24 வயதான அரவிந்தராஜ் தனது தாயுடன் பாலமேட்டில் வசித்து வந்தார். அரவிந்தராஜ் ஜல்லிக்கட்டு போட்டியில் மிகுந்த ஆர்வம் உடையவர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று மாடுகளை பிடித்து பீரோ, ஹெல்மெட், தங்கக்காசு உள்ளிட்ட பல பரிசுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று முதல் 3 சுற்றில் அரவிந்த் ராஜ் 9 காளைகளை அடக்கி, மூன்றாவது சிறந்த வீரராக களம் ஆடிக் கொண்டிருந்தார்.
நான்காவது சுற்றில் சீறிவந்த காளையை அடக்க முயன்ற போது அந்தகாளை கொம்பால் வயிற்றில் குத்தியதில் அவர் குடல் சரிந்து பலத்த காயம் அடைந்தார். தொடர்ந்து பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்று அடுத்தடுத்து மாடுகளை பிடித்த தனது மகன் பரிசுகளோடு வீட்டிற்கு வருவான் என்று பெருமையோடு காத்திருந்த அவனது தாய் தெய்வானை தனது மகனை மாடு முட்டி பலியான தகவல் அறிந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்
தனது மகனுக்காகவே இந்த ஊரில் துப்புரவு பணி எல்லாம் செய்து வசித்து வந்ததாக வேதனை தெரிவித்த அரவிந்தராஜின் தாய், தற்போது நிர்கதியாகி இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
இந்த வருட ஜல்லிக்கட்டு போட்டி முடிந்ததும் தனது மகனுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் ஜல்லிக்காட்டில் பங்கேற்று அரவிந்த்ராஜ் உயிரிழந்திருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.