யூடியூப்பர்களால் கடல் உணவின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்பட்ட சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆழி கடல் உணவு ரெஸ்டாரண்டில் பிராண் கறி தோசை கேட்ட வாடிக்கையாளருக்கு, கரப்பான் கறி தோசை வழங்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில், கடல் விருந்து வேற லெவல்... என்று சில சாப்பாட்டு யூடியூப்பர்களால் புகழப்பட்ட ஆழி கடல் உணவு ரெஸ்டாரண்ட் உள்ளது.
இங்கு பெண் ஒருவர் தனது கணவருடன் உணவருந்தச்சென்றுள்ளார். 350 ரூபாய் விலையுள்ள இறால் கறி தோசை ஆர்டர் செய்தார். அந்த தோசையை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தோசைக்குள் இருந்து செத்துப் போன கரப்பான் பூச்சி ஒன்று வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்
அலறியபடியே ஓட்டல் நிர்வாகத்தினரிடம் கரப்பான் தோசை குறித்து புகார் தெரிவித்துள்ளார். இறால் கறி தோசைக்கு பதில் கரப்பான் கறி தோசை வழங்கிய ஓட்டல் நிர்வாகமோ என்ன செய்வதென்று தெரியாமல் உறந்து போய் நின்றுள்ளனர். தவறை உணர்ந்து தங்களை மன்னித்துக் கொள்ளுமாறு ஓட்டல் நிர்வாகம் சமாளித்து உள்ளனர்.
மேற்கொண்டு சாப்பிடாமல் அவர்கள் பாதியிலேயே எழுந்ததால், கரப்பான் தோசை தவிர்த்து மற்ற உணவுகளுக்கு மட்டும் பணம் செலுத்திவிட்டு வெளியே சென்ற அந்தப்பெண்ணுக்கு வாந்தியும் தொடர்ந்து வயிற்று வலியும் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி உள்ளார். அதற்கு தேவையான சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் நலமடைந்து வீடுதிரும்பியதாக கூறப்படுகின்றது.
தனக்கு நேர்ந்தது போல வேறு யாருக்கும், இது போன்று பாதுகாப்பாற்ற முறையில் தரமற்ற உணவு பரிமாறப்படக்கூடாது என்பதற்காக இந்த வீடியோ காட்சிகளை தனது முக நூலில் வெளியிட்டுள்ள அந்தப்பெண், குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் ஒவ்வொரு ஓட்டல்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நடந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக கூறிய ஆழி ஓட்டல் நிர்வாகி லெனோ, எப்போதும் தாங்கள் ஓட்டலை தூய்மையாக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்துவதாகவும் , அதற்காகவே சிறப்பு ஊழியர்களை பணிக்கு வைத்திருப்பதாகவும், எப்படியோ ஒரு கரப்பான் பூச்சி உள்ளே வந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது என்று வருத்தம் தெரிவித்தார்.
மிஸ்டர் யூடியூப்பர்ஸ்.... மீன் இருக்கு... நண்டு இருக்கு... இறால் இருக்கு... மொத்தத்தில் கடல் விருந்தே இருக்குன்னு சொன்னீங்களே கறி தோசைக்குள்ள கரப்பான் இருக்கும்முன்னு சொன்னீங்களா ? என்பதே பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆதங்கமாக உள்ளது.