பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 91 வயதிலும் தந்தை ஒருவர் தனது பாச மகளுக்கு ஐந்து கரும்புகளை தலையில் வைத்துக்கொண்டு சுமார் 14 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே சென்று பொங்கல் சீர் வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வடக்கு கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் செல்லத்துரை என்பவர் தான் அந்த 91 வயது வாலிபர்..!
செல்லத்துரை -அமிர்தவள்ளி தம்பதிக்கு சுந்தராம்பாள் என்ற மகள் உள்ளார். சுந்தராம்பாளை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம் பட்டியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகளுக்கு 12 ஆண்டுகள் கழித்து இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
அப்போது முதல் தனது மகள் , மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் தொடர்ச்சியாக 9 ஆண்டு காலமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது சைக்கிளில் சென்று பொங்கல் சீர் வழங்குவதை வாடிக்கையாக செய்து வருகின்றார்.
அந்தவகையில் இந்த ஆண்டும், தேங்காய், பழம், மஞ்சள் கொத்து, வேட்டி, சேலை, துண்டு , பூ, பச்சரிசி, வெள்ளம் ஆகியவற்றுடன் ஐந்து கரும்புகளை தலையில் வைத்துக் கொண்டு செல்லதுரையின் சைக்கிள் பயணம் மகளின் வீட்டை நோக்கி புறப்பட்டது.
கரும்பை கையால் பிடிக்காமல் சைக்கிளை சுமார் 14 கிலோ மீட்டர் ‘தூரம் தலையால் பேலன்ஸ் செய்தபடி சைக்கிளை ஓட்டிச் சென்ற பெரியவர், தனது மகளுக்கு பொங்கல் சீர் வழங்கினார்.
இந்த வயதிலும் மகள் குடும்பத்தின் மீது கொண்ட பாசத்தால் உற்சாகமாக காணப்படும் பெரியவர் செல்லத்துரை தான் உயிரோடு இருக்கும் வரை சைக்கிளில் வந்து பொங்கல் சீர் வழங்குவேன் என்கிறார் உறுதியுடன்..!