உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என வள்ளுவரால் வாழ்த்துப் பெற்ற உழவர்களைக் கொண்டாடும் திருநாள் இன்று. தை மாதப் பிறப்பின் தொடக்கமாகவும் இந்நாள் அமைந்துள்ளது.
தமிழ் மக்களின் கலாசாரப் பண்பாட்டு வரலாற்றில் பொங்கலுக்கு தனி இடம் உண்டு. இயற்கையின் அருளுக்கு நன்றி தெரிவித்து பாரம்பரிய திருவிழாவாக இதனை தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.
புத்தாடை அணிந்து, புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு பழங்களுடன் கதிரவனுக்குப் படையலிட்டு இந்த நாளை வீடுதோறும் மக்கள் கொண்டாடுகின்றனர். பொங்கல் பானை பொங்குவது போல் இல்லம்தோறும் மகிழ்ச்சி பொங்கும் நன்னாளாக இது வரவேற்கப்படுகிறது.
கிராமங்களில் பொங்கலை முன்னிட்டு ஏராளமான கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும், ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் போன்றவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.