தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். பயனற்ற பொருட்களை எரித்ததால், பல இடங்களில் புகைமூட்டமாகக் காணப்பட்டது.
பழைய தீய எண்ணங்கள் மறைந்து புதிய நல்எண்ணங்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொங்கலுக்கு முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்திரன் முதலியோரை வணங்கி திருப்தி செய்யும் நாள், போகியாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் போகிப் பண்டிகையை வீடுகள்தோறும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, வீட்டை சுத்தம் செய்து தேவையற்ற பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது. இதையொட்டி, தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. பயனற்ற பொருட்களை எரித்தும், மேளம் அடித்தும் போகியை வரவேற்றனர்.
சென்னையின் பல்வேறு இடங்களில் அதிகாலையில் ஏராளமானோர் கனல் மூட்டி மேளம் கொட்டி பழையன கழித்து போகியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் தங்களது இல்லம் முன்பு பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி போகி திருநாளை கொண்டாடினர்.