திருப்பூர் பேருந்து நிலையத்தில் பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டி உடன் குடித்த மதுப்பிரியரை , குடிவெறியில் பெண் ஒருவர் செருப்பால் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் சுடிதார் அணிந்த லேடி ஒருவர் , சால்ட் பெப்பர் லுக்கில் தாடியோடு சாலையோரம் படுத்திருந்த மதுப்பிரியரை எழுப்பி சரமாரியாக தாக்கினார்.
தனது பணத்தை அந்த நபர் திருடிவிட்டதாக கூறி வளைத்துப்பிடித்து , செருப்பால் அடித்தார்.
தடுக்க வந்த பொதுமக்களிடம் , என்கிட்ட கைய வச்ச விட்டுறுவேனா ? என்று கூறிய அந்தப்பெண், கொலை வெறியுடன் அவரை தாக்கி உதைத்தார்.
மதுவுக்கு அடிமையானதால், குடும்ப வாழ்க்கை வெறுத்து , ரிஸ்க்கே இல்லாத தொழில் என்று பிச்சையெடுத்து மது குடித்து வந்த அந்த மதுப்பிரியரோ, பெண்ணின் தாக்குதலால் நிலைகுலைந்து போனார்.
ஒரு கட்டத்தில் அந்த மதுப்பிரியரின் கழுத்தில் காலை வைத்து மிதித்ததால் அக்கம் பக்கத்தினர் பதறிப்போய் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு சாதாரண உடையில் வந்த போலீசார், வந்து விசாரித்த போது அந்தப்பெண்ணும் மூக்கு முட்ட குடி போதையில் இருப்பது தெரியவந்தது. மதுப்பிரியரை சோதித்த போது அவரிடம் பணம் ஏதும் இல்லை.
இதையடுத்து அந்தப் பெண்ணிடம் விசாரித்தனர், அவர் வேதாரண்யத்தை சேர்ந்த பிரியா என்பதும் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்துவருவதும் தெரியவந்துள்ளது. தான் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்து விட்டு திரும்பிய போது இந்த நபரும் அங்கு வந்ததாகவும், தனது பணம் காணாமல் போனதால் இவர் திருடி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பணத்தை திரும்பக்கேட்டு தாக்கியதாக தெரிவித்தார்.
மதுவை ராவாக குடித்த ரங்கீலா போல போதையில் இருந்த பெண்ணை அழைத்துச்செல்ல மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் , போலீஸ் பிடியில் இருந்து அந்தப்பெண் தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
அந்த குடிகார பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.