அரசு தயாரித்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முறையாக படிக்கவில்லை என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். உரையில் திருத்தம் செய்ததை தெரிவிக்காமல் பொதுமேடையில் ஆளுநர் பேசியதாக சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை படித்த ஆளுநர், அரசு நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டார்.
அப்போது, உரையில் இருந்த 'திராவிட மாடல்', 'சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது' போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தார்.
அதேபோல், சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை ஆகிய வார்த்தைகள் அடங்கிய வாக்கியங்களையும் ஆளுநர் படிக்காமல் தவிர்த்தார்.
அதன் பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு தயாரித்த அறிக்கையை படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது மிகவும் வருத்தமளிப்பதாக கூறினார்.
அச்சிடப்பட்டதற்கு மாறாக பேரவையில் ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இடம்பெறக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரை குறித்து முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்தபோதே, தனது செயலாளர், பாதுகாப்பு அதிகாரியிடம் விளக்கம் கேட்ட ஆளுநர், உடனடியாக பேரவையிலிருந்து வெளியேறினார்.
தேசியகீதம் இசைக்கப்படும் முன்பே அவர் அங்கிருந்து வெளியேறி புறப்பட்டார்.
முன்னதாக, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையிலிருந்து வெளியேறினர்.
அதன்பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும், முதலமைச்சரின் தீர்மான உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததும், அவரை அமர வைத்து கொண்டு முதலமைச்சர் அவ்வாறு பேசியதும் மரபுக்கு எதிரானது என்றார்.
கடந்த 7ஆம் தேதியே உரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், பேரவையில் அந்த உரையை விட்டு விட்டு அவர் படித்தது ஏற்றுக்கொள்ள இயலாதது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அப்போது, ஆளுநர் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்ட ஆவணத்தை அமைச்சர் காண்பித்தார்.
அரசின் திட்டம் மற்றும் கொள்கையினை ஆளுநர் படிப்பது தான் மரபு என்றும், ஆளுநரை தங்களின் சித்தாந்தத்திற்கு புகழ்பாடக்கூடியவராக அரசு கருத முடியாது என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அரசியல் அமைப்புக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது வருத்தம் அளிப்பதாகவும், உரையில் திருத்தம் செய்ததை தெரிவிக்காமல் பொதுமேடையில் ஆளுநர் பேசியது நாகரிகமல்ல என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.