குவைத்தில் சாக்லேட் கம்பெனியில் வேலை வாங்கிகொடுப்பதாக, திருவாரூர் மாவட்டத்தில் ஆறு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரபீக், தனக்கு தெரிந்த சம்சுதீன் என்பவர் மூலம், வேலை வாங்கித்தருவதாக கூறியதையடுத்து, பதினோரு பேர் பாஸ்போர்ட் மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாயும், 8 பேர் தலா 15 ஆயிரம் ரூபாயும் கொடுத்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்காக மும்பைக்கு சென்றவர்கள், அங்கு சம்சுதீனிடம் பணத்தை கொடுத்த நிலையில், 11 பேருக்கு விசா மற்றும் விமான டிக்கெட் வந்துள்ளது.
இதனையடுத்து, அவர்கள் குவைத் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தபோது, கள்ளக்குறிச்சியை சேர்ந்த 11 பேரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக சம்சுதீனை மும்பை போலீசார் கைது செய்துள்ளதாக, செய்திகள் வெளியானது.
இதனையடுத்து, போலி விசா, டிக்கெட் அனுப்பி தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 19 பேரும், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.