கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒன்றரை வயது குழந்தை 5 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோலையூர் கிராமத்தை சேர்ந்த அன்பு - மாதம்மாள் தம்பதியினருக்கு சிவ ஸ்ரீ என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது.
இவர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் மாதம்மாளின் அக்கா சித்ராவும், அவரின் கணவரும் குழந்தையை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை மாதம்மாள் வேலைக்கு சென்று விட்ட நிலையில் குழந்தை பக்கத்து வீட்டில் தரைமட்டத்தில் உள்ள மூடியில்லாத தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென குழந்தையை காணாததால், சித்ரா தேடிய போது, குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் கிடந்தது தெரிய வந்தது.
சிவஸ்ரீயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.