கோயம்புத்தூரில், மாற்றுத்திறனாளி மகனுடன் தங்குவதற்கு இடமின்றி தவித்து வந்த பெண்ணிற்கு, மனு அளித்த இருபத்து நான்கு மணி நேரத்தில் வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் வழங்கினார்.
செட்டிப்பாளையம் அருகே பெரியார் நினைவு சமத்துவபுரத்தை சேர்ந்த ஷீலா, கணவரை இழந்த நிலையில் 14 வயது மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவற்ற மூதாட்டியின் வீட்டில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வீடு கேட்டு ஷீலா மனு அளித்திருந்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் மலுமிச்சம்பட்டி திட்ட பகுதி குடியிருப்பில் தரை தளத்தில் வீட்டை ஒதுக்கீடு செய்து, வாரியத்திற்கு செலுத்த வேண்டிய முப்பத்து ஆறாயிரம் ரூபாயை, மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து, ஆட்சியர் வழங்கினார்.