சேலத்தில் பெரியார் சிலை முன்பு வைத்து மாலை மாற்றி காதல் ஜோடி ஒன்றுக்கு சுயமரியாதை செய்து வைக்கப்பட்ட நிலையில் அந்தப்பெண்ணின் கழுத்தில் ஏற்கனவே மஞ்சள் தாலி இருந்ததை கண்டுபிடித்ததால் அவர் கண்ணீர் விட்டு கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவரும் தேனி மாவட்டம் புதூர் பகுதியை சேர்ந்த கௌசல்யா என்பவரும் நாமக்கல் அருகே தனியார் கல்லூரியில் படிக்கும்போது காதல் மலர்ந்துள்ளது.
பெரியாரிஸ்டான வசந்தகுமார் ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மெக்கானிக்கல் தொழில் செய்து வரும் நிலையில் தனது காதலி கவுசல்யாவை பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய திட்டமிட்டார். அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு மாலை மாற்றி, உறுதி மொழி ஏற்று பெரியார் தொண்டர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார் .
இருவரும் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டதாக பெரியார் ஆதரவாளர்கள் தெரிவித்த நிலையில் பெண்ணின் கழுத்தில் தாலி இருந்ததை பார்த்து அது எப்போது..? யாரால்..? கட்டப்பட்டது என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதால், பதில் சொல்ல இயலாமல் கதறி அழும் நிலைக்கு அந்த பெண் தள்ளப்பட்டார்.
உடனடியாக அந்த காதல் ஜோடியை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர். நெற்றியில் குங்குமம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் செய்தியாளர்களை மிரட்டினார்.
அடுத்த நொடி செய்தியாளர்கள் எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்ததால் நிலைமை விபரீதமாவதை உணர்ந்து அந்த ஆக்ரோச இளைஞரை அங்கிருந்தவர்கள் ஒரு தட்டு தட்டி விரட்டினர்.
இதற்கிடையே அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியவர் வேறுயாருமல்ல , பெரியாரிஸ்டான காதலன் வசந்தகுமார் தான் என்றும் முதலில் தனது காதலி கவுசல்யாவை கொண்டலாம்பட்டியில் உள்ள கரபுரநாதர் சிவபெருமான் கோவிலுக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
தாலியை துப்பட்டாவல் மறைத்து தனது சித்தாந்தபடி மாலை மாற்றி சுயமரியாதை திருமணம் செய்தது தெரியவந்ததால் சுயமரியாதை திருமணத்துக்கு ஏற்பாடு செய்து அகம் மகிழ்ந்த பெரியார் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.