அண்மைக்காலமாக சென்னையில் அதிகரித்து வந்த ரத்த ஓவியம் என்ற விபரீத வரைபட முயற்சியை சுகாதாரத்துறை தடுத்து நிறுத்தி உள்ளது. உதவாத ரஞ்சிதத்தை உயிர்காக்கும் ரத்தத்தில் வரைந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
ஓவியம் அற்புதமான வரைகலை... இந்த ஓவியத்தின் மதிப்பை உயர்த்துவதாக நினைத்து உதிரத்தை கொண்டு ஓவியம் வரைவது புதிய கலைவடிவமாக பார்க்கப்பட்டது.
சம்பந்தப்பட்டவரின் சுய விருப்பத்துடன் உடலில் இருந்து ஊசியால் ரத்தம் எடுத்து, அதனை மையாக்கி அவரது மனதை கவர்ந்த ரஞ்சிதங்களின் ஓவியத்தை சில ஆயிரம் செலவில் ஓவியர்கள் வரைந்து கொடுத்து வந்தனர்
எதை செய்தாலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செய்யும் குணம் கொண்ட நம்ம ஊர் 2k காதலர்களின் அண்மை கால அபூர்வ பரிசாக இந்த உதிர ஓவியத்தை அளித்து வந்தனர்.
சென்னை தியாகராய நகரில் தி பிளட் ஆர்ட் என்ற பெயரில் இதற்கு என்று பிரத்யேக வரைகலை கூடமும் இயங்கி வந்தது. கையில் கயிற்றை கட்டி சிரிஞ்சால் நரப்பில் குத்தி ரத்தத்தை உறிஞ்சி அதன் மூலம் அவர்கள் விரும்பும் நபர்களின் படத்தை வரைந்து கொடுத்து பணம் வசூலித்து வருவதாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் குவிந்தது.
இதனை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தியாகராய நகரில் உள்ள அந்த வரைகலை கூடத்திற்குள் புகுந்து ரத்தம் எடுக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களையும், இதற்கு முன்பாக ரத்தத்தில் வரைந்த ஓவியங்களையும், பறிமுதல் செய்ததோடு, உயிர் காக்க உதவும் ரத்தத்தை கொண்டு இனிமேல் விபரீத ஓவியங்களை வரையக்கூடாது என்று எச்சரித்து சென்றனர்.
இந்த ரத்த ஓவியங்களை யூடியூப்பில் சாட்ஸ் ஆக பதிவேற்றம் செய்து ஏராளமான பார்வைகளை பெற்று வந்த தி பிளட் ஆர்ட் யூடியூப்பர் தனது தளத்தில் இருந்து ரத்த ஓவியங்கள் அனைத்தையும் நீக்கி உள்ளதாகவும், இனி ரத்தத்தை கொண்டு ஓவியங்கள் வரைவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
இதற்க்கிடையே ரத்தத்தில் ஓவியம் வரைவது தவறு எனவும் அப்படி செய்தால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்