புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மேல் நிலை நீர் தேக்கத்தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தச்சென்ற மாவட்ட ஆட்சியர் முன்பு சாமியாடிய பெண் ஒருவர் அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் இறையூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.
அந்த கிராமத்தில் சில குழந்தைகளுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அங்கு மருத்துவமுகாம் அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம், அங்குள்ள அய்யனார் கோயிலுக்குள் தங்களை சாமி கும்பிட மற்றொரு தரப்பினர் அனுமதிப்பது இல்லை எனவும், இந்த ஊரில் டீக்கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதாகவும் ஒரு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.
அவர்களை உடனடியாக கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைத்தார் மாவட்ட ஆட்சியர்
அப்போது அங்கு சாமி வந்ததாகக் கூறி கத்திக் கூச்சலிட்டபடியே ஆடிய பெண் ஒருவர் , அங்கிருந்தவர்களை வெளியே வரச்சொல்லி ஒருமையில் இழிவாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது
இதனை தொடர்ந்து சாமி வந்ததாக கத்தி கூச்சலிட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, டீக்கடையில் ஆய்வு நடத்தி கடை உரிமையாளர்களான தம்பதியினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.