கிருஷ்ணகிரியில் வெறி நோய் தடுப்பூசி முகாமில் திடீரென வெறி பிடித்த பிட்புல் நாய் ஒன்று மற்றொரு நாயை விரட்டி விரட்டி கடித்ததால் முகாமை நடத்திய அதிகாரிகளும், நாயை அழைத்து வந்த நாய் நேசர்களும் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
கிருஷ்ணகிரி பி.ஆர்.சி பள்ளி வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலம் வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி முகாமை துவங்கி, வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்த முகாமில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தினர். அப்போது தடுப்பூசி செலுத்த அழைத்து வந்த பிட்புல் இன நாய் ஒன்று வெறி பிடித்து அங்கிருந்தவர்கள் மீது பாய்ந்தது. அனைவரும் அலறியடித்து ஓட, அங்கு உரிமையாளரின் பிடியில் இருந்த மற்றொறு நாயை விரட்டி விரட்டி கடித்தது.
வெறிபிடித்த நாயை கட்டுப்படுத்த முடியாமல் நாயின் உரிமையாளர், பெல்ட்டாலும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் கொண்டும் அந்த நாயை தாக்கினர்.
நாய்களை துன்புறுத்துவதோ, அடிப்பதோ தவறு என்று ஊராருக்கு புத்தி சொல்லும் நாய் நேசர்கள் கூட தங்கள் கொள்கையை தளர்த்தி, வெறி பிடித்த அந்த பிட் புல் நாயை , பிளாஸ்டிக் சேர்களை எடுத்து அடித்தனர்.
இறுதியில் நாயின் உரிமையாளர், வெறி பிடித்த தனது நாயை தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்தி பெல்டில் கட்டினார். அதற்குள்ளாக தடுப்பூசி செலுத்திகொள்ள வந்தவர்களும், அதிகாரிகளும் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.