கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் மூடப்பட்ட காப்பகத்தில் இருந்து அழைத்துச்செல்லப்பட்ட முதியவரை, பணத்திற்கு ஆசைப்பட்டு மீண்டும் தன் வசப்படுத்த முயன்ற காப்பக நிர்வாகியை, போலீசார் தேடி வருகின்றனர்.
புத்தேரி பகுதியில் ஜேக்கப் என்பவரால் அரசு அனுமதியின்றி நடத்திவந்த முதியோர் காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டு, அங்கு இருந்த முதியோர்கள் வேறொரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர்.
அபுசாலி என்ற முதியவருக்காக, அவரது குடும்பத்திலிருந்து மாதம் 20 ஆயிரம் ரூபாய் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டு வந்ததால், அந்தப் பணத்தை தொடர்ந்து பெற ஆசைப்பட்டு, அபுசாலியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஜேக்கப் முயன்றுள்ளார். அவரது திட்டத்தின்படி, இளம் பெண் ஒருவர் அபுசாலியின் உறவினர் என கூறிக்கொண்டு, வீட்டிற்கு அவரை அழைத்துச்செல்ல அனுமதிக்குமாறு, சமூக நலத்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், விசாரணையில் அபுசாலியை அழைத்துச்செல்ல குடும்பத்தினர் முற்படவில்லை என்பது தெரியவந்ததையடுத்து, முதியவரை அழைத்துச்செல்ல வந்த இளம்பெண், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.