தமிழக மாணவர்கள் JEE தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தேசிய தேர்வுகள் முகமையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, தீர்வு காணப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர, மத்திய அரசால் ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்படும் நிலையில், அதற்கான விண்ணப்பத்தில், 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள், 2020 ஆம் ஆண்டில் கொரோனா சூழலில் 10ஆம் வகுப்பு படித்தபோது மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படாமல், தேர்ச்சி என்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், ஜே இ இ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஜே.இ.இ நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தில் 10 வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை என, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.