தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு நடித்த காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன், பெண் யூடியூபரைத் தாக்கிய வழக்கில் 2 வருடங்கள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார். சூர்யா தேவியின் புகாரால் கம்பி எண்ணும் காமெடியன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அது இது எது என்ற நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு என்ற பெயரில் பெண் வேடமிட்டு காமெடி செய்து வந்தவர் நாஞ்சில் விஜயன்.
வனிதாவின் 3 வது திருமணம் குறித்து விமர்சித்து பிரபலமான யூடியூப்பர் சூர்யாதேவியுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக முன் விரோதம் இருந்துவந்தது.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா தேவி குறித்து நாஞ்சில் விஜயன் அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து நாஞ்சில் விஜயனின் வீட்டிற்கு ஆதரவாளருடன் சென்றுள்ளார் சூர்யாதேவி. அங்கு இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இருவருமே தாங்கள் கத்தியால் தாக்கப்பட்டதாக வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தனர். சூர்யா தேவி சாமர்த்தியமாக முன் ஜாமுன் பெற்றுவிட்டு , நாஞ்சில் விஜயன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பேட்டி அளித்தார்.
இதற்க்கிடையே 5 முறை போலீசார் சம்மன் அனுப்பியும், நாஞ்சில் விஜயன் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த வாரம் நாஞ்சில் விஜயன் மீது சூர்யாதேவி மீண்டும் புகார் அளித்தார். இதையடுத்து 2 வருடமாக கிடப்பில் போடப்பட்ட அடிதடி வழக்கை தூசுதட்டிய போலீசார் , நாஞ்சில் விஜயனை கைது செய்தனர்.
சூர்யா தேவி தனக்கு தெரிந்த அரசியல் பிரபலம் மூலம் அழுத்தம் கொடுத்து நாஞ்சில் விஜயனை கைது செய்ய வைத்திருப்பதாக ஒரு தகவல் பரவிய நிலையில் அதனை போலீசார் மறுத்துள்ளனர்.
சூர்யா தேவி போல நாஞ்சில் விஜயன் முன் ஜாமீன் பெற்றிருந்தால் கைதாகி இருக்க மாட்டார் என்றும் குறைந்த பட்சம் போலீஸ் விசாரணைக்காவது ஆஜராகி விளக்கம் அளித்து வழக்கை முடித்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.