திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சாதி பெயரை சொல்லித்திட்டியதாக அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் வாங்குவதற்கு, 15 லட்சம் ரூபாய் கேட்டு கவுன்சிலரின் உறவினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பொய்யாக தீண்டாமை வழக்கு பதிவு செய்ததாக டிஎஸ்பிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வீடியோ ஆதாரத்தால் அம்பலமான தீண்டாமை வன்கொடுமை பஞ்சாயத்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவனாயக்கன் பேட்டையை சேர்ந்தவர் ஆசிரியர் ஜவகர், இவரது மகன் ராஜேஷ்குமார் இவர் அந்தப்பகுதியில் திருமண மண்டபம், மற்றும் தேங்காய் உடைக்கும் மண்டி ஆகியவற்றை நடத்தி வருகின்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் 25 ந்தேதி இவரது திருமண மண்டபத்தில் வேலைபார்த்து வந்த குமார் என்பவர், தேங்காய் உடைக்கும் பணியில் ஈடுபட்ட போது அவரது கைவிரல்கள் எந்திரத்தில் சிக்கி துண்டானதாக கூறப்படுகின்றது.
உடனடியாக குமாரை அழைத்துச்சென்று மருத்துவ உதவிகள் செய்த ஜவகர் மருத்துவ செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் அளித்ததாகவும், சென்னை ஸ்டாண்லி மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று குமார் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகின்றது. கடந்த அக்டோபர் மாதம் 8 ந்தேதி உறவினர்களுடன் ஜவகரின் வீட்டுக்கு சென்று குமார் இழப்பீடு பணம் கேட்டதாக கூறப்படுகின்றது.
பணம் கொடுக்க மறுத்த நிலையில் அங்கிருந்த ராஜேஷ்குமார் , சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், உடன் இருந்த ஆசிரியர் ஜவகரும் சாதி பெயரை சொல்லி திட்டி விரட்டியதாகவும் கூறி செங்கம் காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஒரு மாதம் கழித்து நவம்பர் மாதம் 6 ந்தேதி தந்தை ஜவகர் ,மகன் ராஜேஷ்குமார் ஆகியோர் மீது பி.சி. ஆர் சட்டம் என்று சொல்லப்படும் தீண்டாமை வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தீண்டாமை வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக ஒரு மாத காலம் செங்கம் டி.எஸ்.பி சின்ராஜின் விசாரணையின் கீழ் இந்த புகார் இருந்ததாக கூறிய ராஜேஷ்குமார் , அப்போது , இந்த புகார் பொய்யானது என்று தனக்கு தெரியும் என்றும் எதிர்தரப்பு விருப்பபடி வெளியில் பேசி தீர்க்காவிட்டால் வழக்கு போட்டுவிடுவேன் என்ற டி.எஸ்.பி சின்ராஜ், இது கொலை வழக்கை விட கொடிய வழக்கு என்று மிரட்டியதாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார்.
டி.எஸ்.பி பேச்சைக்கேட்டு , தங்களுக்கு எதிராக புகார் அளித்த குமார் தரப்பினரிடம் பேசச் சென்றதாகவும், அங்கிருந்த கவுன்சிலரின் உறவினர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இழப்பீடாக 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் புகாரை வாபஸ் பெறுவதாக பேரம் பேசினர் என்றும் அதற்காண வீடியோ ஆதாரத்தையும் ராஜேஷ் வெளியிட்டார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து டிஎஸ்பி சின்ராஜிடம் கேட்டபோது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தான் கருத்து கூற விரும்பவில்லை என்றார்.
இதற்கிடையே பட்டியலின மக்களின் உரிமைக்குரலுக்கு வலிமை சேர்க்கும் விதமாக அரசால் கொண்டுவரப்பட்ட தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துவது வீடியோ ஆதாரத்தால் அம்பலமாகி உள்ள நிலையில், பணம் பறிக்கும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட இந்த பொய்யானவழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ராஜேஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க செங்கம் டி.எஸ்.பி சின்ராஜுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.