வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல், நள்ளிரவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசியதுடன், வட தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது.
வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த மாண்டஸ், நேற்று காலை புயலாக வலுகுறைந்த நிலையில் இரவு வேளையில் கரையைக் கடக்கத் தொடங்கியது.
வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின் படி புதுச்சேரி - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே, மாமல்லபுரத்திற்கு அருகே புயல் கரையைக் கடந்தது.
சென்னை - புதுச்சேரி இடையே கடந்த 121 ஆண்டுகளில், கரையேறிய 13ஆவது புயல் மாண்டஸ் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
புயல் நிலைகொண்டிருந்த போது புதுச்சேரியிலிருந்து, ஸ்ரீஹரிகோட்டா வரையில் மேகங்கள் பரந்து விரிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், புயல் கரையைக் கடந்தாலும் அதன் தாக்கம் ஓரிரு தினங்களுக்கு இருக்க வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.
மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தாலும், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளை பலத்த சூறைக்காற்று வீசியது. மாண்டஸ் புயலின் தாக்கத்தால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது.
இதன் காரணமாக, சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர் உள்ளிட்ட கடற்பகுதிகளில் பேரலைகள் எழுந்த நிலையில், கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.
மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னையுடன் புதுச்சேரியை இணைக்கும் இ.சி.ஆர். சாலையில் தற்காலிமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நள்ளிரவில், புயல் முழுவதுமாக கரையை கடந்த நிலையில், போக்குவரத்து படிபடியாக சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்த மாமல்லபுரம் பகுதியில், பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்ததால், அப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும், மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், வீடுகளின் மேற்கூரைகள் அடித்து செல்லப்பட்டது.
மாண்டஸ் புயலின்போது, சென்னை உத்தண்டி பகுதியில் ஊருக்குள் கடல்நீர் உட்புகுந்தது. முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
புயல் காரணமாக வீசிய பலத்த சூறைக்காற்றில், அண்ணா மேம்பாலம் அருகே சாலையின் குறுக்கே பழமையான மரம் விழுந்தது. அதேபோல். அடையாறு பகுதியிலும் வீசிய பலத்த காற்றால், போலீசார் வைத்த தடுப்புகள் காற்றின் வேகத்தை தாங்காமல் கீழே விழுந்தன.
இந்நிலையில், புயல் பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் 5 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், மழையை பொருட்படுத்தாமல் மீட்பு பணி நடைபெறுவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங்பேடி தெரிவித்தார்.