சினிமா படத்தொகுப்பாளரைகடத்திச்சென்று தாக்கி பணம் பறித்த வழக்கில் தேடப்படும் ஷூ படத்தின் தயாரிப்பாளர் தான் சிங்கப்பூரில் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
யோகிபாபு நடிப்பில் வெளியான ஷூ படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக். இவருக்கும், ஷூ படத்திற்கான ஓடிடி டிஜிட்டல் மற்றும் வெளி மாநில உரிமையை பெற்ற விநியோகஸ்தர் மதுராஜ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்த நிலையில் கார்த்திக்கின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படும் 11 பேர் கொண்ட கும்பல் மதுராஜ் அலுவலகம் சென்று, அங்கிருந்த படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா, ஊழியர் பென்சர் ஆகிய இருவரை கடத்திச்சென்றது. அவர்களை மிரட்டி ஏடிஎம் கார்டை பறித்து பணம் எடுத்ததாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வினியோகஸ்தர் மதுராஜ் விருகம்பாக்கம் காவல் நிலையம் சென்று கடத்தல் கும்பலை பிடிப்பதற்கும், கடத்தல் கும்பல் காரை பறிமுதல் செய்வதற்கும் உதவியாக இருந்தார். இந்த வழக்கில் வழக்கறிஞர்களான நாகராஜ், வினோத்குமார், கொலை வழக்கில் தொடர்புடைய பாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கார்த்திக்கிற்கும் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று விநியோகஸ்தர் மதுராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதே போல ஷூ பட தயாரிப்பாளர் கார்த்திக், தான் சிங்கப்பூரில் இருப்பதாகவும், தனது வழக்கறிஞர் நாகராஜிடம் தனக்கு மதுராஜ் பணம் தரவேண்டியது குறித்து பேசியதாகவும், அவர் மதுராஜ் அலுவலகம் சென்று மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் கார்த்திக் சிங்கப்பூரில் இருப்பதாக கூறி இருந்தாலும் அவர் உண்மையிலேயே தமிழகத்தில் வேறு எங்காவது பதுங்கி இருக்கிறாரா ? அல்லது வீடியோவில் சொன்னபடி சிங்கப்பூருக்கு தப்பி ஓடிவிட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.