அதிமுகவைச்சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கலாம் என தெரிவித்துள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது சென்னை, கோயமுத்தூர் மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, எஸ்.பி.வேலுமணி மீது வழக்குத்தொடரப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கையை அடிப்படையாக வைத்து இந்த வழக்கினை கைவிடுவதாக, அப்போதைய தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மீண்டும் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் ஆகியோர், டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவிட்டனர்.