தமிழ்நாட்டில் இருந்து லாரியில் ஆந்திராவுக்கு சென்று 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வெட்டிக் கொண்டு தப்பி வந்த 44 பேர் கொண்ட கோடாரி கும்பலை போலீசார் கைது செய்தனர். சினிமா பாணியில் போலீசார் 10 கிலோ மீட்டர் தூரம் லாரியை விரட்டிச்சென்று மடக்கிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கூலி தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
அதன் பின்னர் செம்மரம் வெட்ட கும்பலாக செல்வோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
இந்த நிலையில் கையில் கோடாரி கம்புகளுடன் செம்மரம் வெட்டிவிட்டு, தமிழக கூலித் தொழிலாளர்கள் ஒரு கும்பலாக லாரியில் வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அடுத்த காஜூல மண்டையும் காவல் நிலைய போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அந்த வழியாக வந்த சரக்கு லாரி ஒன்று நிற்காமல் மின்னல் வேகத்தில் கடந்து சென்றது.
இதையடுத்து போலீசார் தங்கள் வாகனத்தில் ஏறி, அந்த லாரியை விரட்டிச்சென்றனர். சரக்கு ஏற்றி செல்லும் லாரி போல தார்பாய் போடப்பட்டு, அதன் மேல் அமர்ந்திருந்தவர்கள் போலீசாரின் வாகனத்தை கம்பு கொண்டு தாக்க முயன்றனர்
போலீசாருக்கு ஈடு கொடுத்து லாரி ஓட்டுனரும் வேகமாக இயக்கிச்சென்றார். வழியில் லாரியில் இருந்து ஆயில் கசிந்து சாலையில் கொட்டியது. இது குறித்து போலீசார் எச்சரித்தும் லாரி நிற்காமல் சென்றது.
சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் லாரியை ஜீப்பில் விரட்டி சென்ற போலீசார் கடுமையான போராட்டத்திற்கு இடையே, லாரியை மடக்கி பிடித்தனர். லாரியிலிருந்து குதித்து தப்பி ஓட முயன்ற 44 கூலித்தொழிலாளர்களை கோடாரி மற்றும் மரம் அறுக்கும் வாள்களுடன் மடக்கி பிடித்தனர்
அந்த லாரியில் பதுங்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
44 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அளவுக்கதிகமாக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் உயிரை பணயம் வைத்து, செம்மரம் வெட்டி வந்தது தெரியவந்தது. இவர்களை மரம் வெட்ட அழைத்து வந்த செம்மரக்கடத்தல் கும்பல் தலைவன் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சினிமா பாணியில் நடந்த இந்த சேசிங் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.