செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது, அவருக்கான பாதுகாப்பில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாட்டில் இருந்த குறைபாடு தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு எழுதியிருந்ததாக கூறப்படும் கடிதத்தின் அடிப்படையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அண்ணாமலை புகார் மனு அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் கொண்ட நபராக பிரதமர் மோடி இருப்பதாகவும், அவரது பாதுகாப்பில் தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழக அரசு முறைகேடு செய்துள்ளதாக ஆளுரிடம் புகார் அளித்திருப்பதாக கூறிய அவர், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தந்த பிறகும் 6 மாதமாக தமிழக அரசு ஏன் அவசர சட்டத்தை அமல்படுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.