கூகுள் மேம் பார்த்தவாரே கார ஓட்டிச்சென்றவர் வழி தவறிச்சென்று கழிவு நீர் கால்வாய்க்குள் காரை இறக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
சன்னுக்கு ஏது சண்டே என்று ஞாயிற்றுக்கிழமை என்றால் தங்கள் கார் மற்றும் இரு சக்கரவாகனங்களில் ஏறி கூகுகூகுள் மேப் உதவியுடன், புதுபுது கோவில்கள், காடுகள், மலை அருவிகள் தேடி குடும்பத்துடன் பயணிக்கும் சென்னை வாசிகள் பலர் உண்டு..!
அந்தவகையில் சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருக்கோவிலூர் அருகே உள்ள ஸ்ரீ ஞானானந்தகிரி தபோவனம் மடத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து இரவு கூகுள் மேப் உதவியுடன் கீழையூர் பகுதியில் உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தபோவனம் மடத்திற்கு செல்வதற்காக கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச்சென்றுள்ளார்.
இந்நிலையில், கோவிலில் இருந்து நேராக சென்று வலப்புறம் உள்ள பாலத்தில் ஏறி திரும்பி செல்ல வேண்டும் என்று கூகுள் மேப் காட்டியுள்ளது. ஆனால் அதனை சரியாக புரிந்து கொள்ளாத ஸ்ரீராம், மெயின் ரோட்டில் செல்வதற்கு பதிலாக தென்பெண்ணை ஆற்றுக்குள் செல்லும் குறுகிய சாலைக்குள் காரை விட்டுள்ளார்
இருள் சூழ்ந்து காணப்பட்டதால், கூகுள் மேப்பை பார்த்தவாரே காரை ஓட்டிச் சென்ற போது, எதிர்பாராத விதமாக குறுகிய சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாயில் காரின் முன்பக்க சக்கரம் இறங்கிச்சிக்கிக் கொண்டதால் காரை மேற்கொண்டு இயக்க முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்
சம்பந்தமே இல்லாமல் குடும்பத்துடன் இரவு நேரத்தில் ஆற்றுக்குசெல்லும் வழியில் காருடன் தவித்து நின்ற ஸ்ரீராமிடம் அந்தபகுதியை சேர்ந்தவர்கள் விசாரித்தனர். அது தவறான பாதை என்றும், கால்வாய்க்குள் கார் சிக்காமல் இன்னும் கொஞ்ச தூரம் இருட்டுக்குள் வழிதவறி சென்றிருந்தால் கார் ஆற்றுக்குள் விழுந்திருக்கும் என்றும் எச்சரித்த உள்ளூர் வாசிகள் அந்த காரை எடுப்பதற்கு உதவினர்
காரில் இருந்த அனைவரையும் கீழே இறங்கச்செய்து, காரை கிரேன் உதவியுடன் பெல்ட் கட்டி மீட்க முயன்றனர். ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர், கால்வாயில் இருந்து கார் பத்திரமாக மீட்கப்பட்டது. காரின் இடது பக்கம் மட்டும் லேசான கீறல்கள் ஏற்பட்டிருந்தது.
அறிமுகம் இல்லாத ஊர்களுக்கு கூகுள் மேப் உதவியுடன் பயணிப்பவர்கள் கூடுமானவரை இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது, அதே நேரத்தில் முன் கூட்டியே ரூட் மேப்பை பார்த்து ஆய்வு செய்த பின்னர் காரை இயக்கினால் இது போன்ற விபரீதங்களை தடுக்கலாம் என்பதே புது இடங்களை தேடிச்செல்லும் எக்ஸ்புளோரர்களுக்கு காவல்துறையினரின் அறிவுறுத்தலாக உள்ளது