டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை என்று ராமநாதபுரம் இளைஞரை, கம்போடியாவுக்கு அழைத்துச்சென்று, இணையதளத்தில் மாடல் அழகி போல போலியாக சாட்டிங் செய்யவைத்து சபலபுத்திக்காரர்களிடம் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபடுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
சொந்தகாசில் சூனியம் வைப்பது போல ஏஜெண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்து வெளி நாட்டு வேலைக்கு சென்று ஆபாச சாட்டிங் கும்பலிடம் சிக்கி அல்லோகலப்பட்ட நம்ம ஊர் இளைஞர் நீதிராஜன் இவர் தான்..!
ராமநாதபுரம் மாவட்டம் பிரபுக்களூரை சேர்ந்த டிப்ளமோ என்ஜீனியரான நீதிராஜனை , கம்போடியாவில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலைக்கு லட்சக்கணக்கில் சம்பளம் தருவதாக ஆசை காட்டி அழைத்துச்சென்றுள்ளார் கொளுந்தூரை சேர்ந்த ஏஜெண்ட் மகாதீர் முகமது. இரண்டரை லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு கடந்த ஜூன் மாதம் சுற்றுலாவிசாவில் நீதிராஜனை கம்போடியாவுக்கு அழைத்துச்சென்ற மகாதீர் முகமது, சொன்னபடி வேலை ஏதும் வாங்கிக் கொடுக்காமல் 3000 அமெரிக்க டாலருக்கு சீனாவை சேர்ந்த சைபர் மோசடி கும்பலிடம் விற்றுவிட்டதாக கூறப்படுகின்றது.
அந்த மோசடி கும்பலோ, இன்ஸ்டாகிராம், முக நூல், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மாடல் அழகி பெயரில் போலியான கணக்குகளை தொடங்கி அதன் மூலம் அமெரிக்காவில் உள்ள தொழில் அதிபர்களுடன் மயக்கும் விதமாக சாட்டிங் செய்து, அவர்களை தங்கள் வலையில் வீழ்த்தி தாங்கள் பரிந்துரைக்கும் நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்ய வைத்து அவர்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்வதை வாடிக்கையாக செய்துள்ளது.
அவர்கள் சொல்வது போல மாடல் அழகியாக நடிக்க மறுத்தால் சிறை போன்ற அறையில் அடைத்து சாப்பாடு போடாமல், கரண்ட் ஷாக் வைத்து சித்ரவதை செய்து இந்த சாட்டிங் சேட்டையில் ஈடுபடுத்தி உள்ளனர். அவர்கள் கொடுத்த சம்பளத்தை பெற்றுக் கொண்டு விருப்பமில்லாமல் சாட்டிங் வேலையை செய்து வந்த நீதிராஜன் அண்மையில் இந்தியதூதரகத்தை அனுகி உண்மையை சொல்லி உதவி கேட்டுள்ளார்
கம்போடியாவில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததற்காக கம்போடியா அரசுக்கு இரண்டரை லட்சம் ரூபாயை செலுத்திவிட்டு இந்திய தூதரகத்தின் உதவியுடன் ஒருவழியாக தமிழகம் திரும்பி உள்ள நீதிராஜன், தன்னை போல 1500 தமிழக இளைஞர்கள் அந்த மோசடி கும்பலிடம் சிக்கி ஆன் லைன் மோசடி வேலைகளுக்கு உதவி வருவதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்
தன்னை ஏமாற்றி அழைத்துச்சென்று கம்போடியாவில் விற்ற மோசடி ஏஜெண்ட் மகாதீர் முகமது மற்றும் சையதுருஹானி ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி இளைஞர் நீதிராஜன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்