கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருமணமான மூன்றாவது மாதத்தில் தாலி கட்டிய கணவனை முன்னாள் காதலன் உதவியோடு மனைவி, விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆழ்வார்கோயிலைச் சேர்ந்த வடிவேல்முருகன் -சுஜா ஆகியோருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம்தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினர் 2 மாதங்கள் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரவில் வடிவேல்முருகன் திடீரென வீட்டில் நினைவிழந்து கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினாலும் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு சரியாக வில்லை. கடந்த ஒரு மாத காலமாக சுஜாவின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததை அடுத்து அவரை வடிவேல்முருகன் கண்காணிக்க துவங்கியுள்ளார்.
ஏற்கனவே, திருமணமான சில நாட்களில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும் அவரோடு தற்போது எவ்வித தொடர்பும் இல்லை எனவும் சுஜா கூறியிருந்தது வடிவேல்முருகனுக்கு நினைவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் சமீபகாலமாக சுஜாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் முன்னாள் காதலனுடனான தொடர்பு மனைவிக்கு தற்போதும் தொடர்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் தனிமையில் செல்போனை தொடர்ந்து மனைவி சுஜா பயன்படுத்திக் கொண்டிருப்பதும் அவரைத் தவிர யாரும் திறக்க முடியாத வகையில் செல்போனை லாக் செய்து வைத்திருப்பதும் அந்த சந்தேகத்தை அதிகரிக்க செய்துள்ளது.
இதனால் சுஜாவுக்கு தெரியாமல் அவர் செல்போனை பயன்படுத்தும்போது லாக் எண்ணை தெரிந்து கொண்டு, செல்போனை வடிவேல்முருகன் திறந்துள்ளார். அப்போது முன்னாள் காதலனுடன் வாட்ஸ்அப்பில் சுஜா நீண்ட நேரம் சேட்டிங் செய்ததை பார்த்துள்ளார்.
இதனால் அந்த சேட்டிங்கை படித்து பார்த்தபோது, அவருக்கு மருந்தில் ஏதோ கலந்து கொடுத்ததாக முன்னாள் காதலன் மற்றும் சுஜா ஆகியோர் பேசிக் கொண்ட தகவல் வாட்ஸ்அப்பில் பதிவாகி இருந்தது.
மேலும் காதலனோடு முறையற்ற உறவில் ஈடுபட்டதும், காதலன் மூலமே குழந்தை பிறக்க வேண்டும் என விடாப்பிடியாக சுஜா கேட்டிருந்ததும், கணவனை தனக்கு பிடிக்கவில்லை எனவும் சேட்டிங் செய்ததை கண்டுபிடித்தார்.
இதனை அடுத்து தனக்கு ஸ்லோபாய்சன் அளித்திருப்பார் என சந்தேகம் கொண்டு, காவல்துறையில் புகார் அளித்து விட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
அங்கு 5 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் வடிவேல்முருகனுக்கு இன்னும் உடல்நிலை சரியாகவில்லை. எனவே இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தனது மனைவியையும் அவரது காதலனையும் கைது செய்து, தனக்கு அளித்த மருந்து என்ன என்று கேட்டறிந்து சிகிச்சை அளிக்க உதவ வேண்டுமென காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் இந்த வழக்கை காவல்துறையினர் திசைதிருப்ப முயல்வதாக அவரது தங்கை ஆரோக்கியமேரி குற்றஞ்சாட்டியுள்ளார்.