திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உடம்பை பளபளபாக்குவதற்கு, சித்த வைத்தியம் செய்து கொள்ள நினைத்து செங்காந்தள் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக பலியானார். வாட்ஸ் அப்பில் வந்த வைத்தியத்தால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ரத்தினம் ஆகிய இருவரும் நண்பர்கள்.
தனியாருக்கு சொந்தமான கல் குவாரியில் கூலி தொழிலாளர்களாக வேலைபார்த்து வந்த இவர்களது செல்போனில் வாட்ஸ் அப்புக்கு சித்தமருத்துவ குருந்தகவல் ஒன்று வந்துள்ளது.
அதில் உங்கள் உடல் மினு மினுக்க பள பளப்பாக செங்காந்தள் கிழங்கை சாப்பிட்டால் போதும் என்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ தகவல்கள் இருந்துள்ளது.
இதனை பார்த்த இருவரும் செங்காந்தள் செடியின் கிழங்கை பிடுக்கிச் சாப்பிட்டதாக கூறப்படுகிறது
அதனை சாப்பிட்ட சில மணி நேரங்களில் வாயிலும் வயிற்றிலும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் இருவரையும் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் அங்கிருந்து அவர்களை வேலூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர்.
வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லோகநாதன் பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். ரத்தினத்திற்கு வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மருத்துவர்களின் முறையான ஆலோசனை இன்றி , வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலம் வரும் தமிழ் மருத்துவம், பாரம்பரிய மருத்துவம், சித்த மருத்துவம் என்பன போன்ற குறுந்தகவல்களை நம்பி இது போன்ற விபரீத மருத்துவத்தை பின் பற்ற வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்