கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார், 10 பேரிடம் கைமாறியது விசாரணையில் தெரியவந்த நிலையில், சென்னையில் இருந்து யார் மூலம் அது கைமாறியது என விசாரணையை முடுக்கிவிட்டுள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள், இச்சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என்பது இன்று தமிழகத்தின் 43 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் தெரிய வந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் கடந்த மாதம் 23-ஆம் தேதி மாருதி காரில் சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இவ்வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்ட நிலையில், கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான தடயவியல் துறை அறிக்கை மற்றும் முபினின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி இது திட்டமிட்ட தாக்கல் என தெரியவந்துள்ளது. முபினின் உடலில் ஏழு ஆணிகள் இறங்கியிருப்பதாகவும், இருதயத்தை துளைத்த ஆணியால் தான் முபின் உயிரிழந்திருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.
அதோடு, சம்பவம் நடந்த அன்று முபின் மக்கள் கூடும் இடம் ஒன்றில் காரை நிறுத்தி வெடிக்க வைக்க கொண்டு சென்றதாகவும் , கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே போலீஸ் வாகன தணிக்கை செய்யும் போது இதற்கு மேல் செல்ல முடியாது என திட்டமிட்டு, அங்கேயே வெடிக்க வைத்துவிடலாம் என காரில் இருந்து இறங்கிய முபின் காரில் இருந்த கேஸ் சிலிண்டரில் தீ வைத்து விட்டு தப்ப முயன்றிருக்கலாம் என தடயவியல் அறிக்கை படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது திட்டமிட்ட தாக்குதல் என முடிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கிய என்.ஐ.ஏ, அதன் தொடர்ச்சியாகவே, இன்று 43 இடங்களில் என்.ஐ.ஏ சோதனையை நடத்தியுள்ளது.
இந்நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு உறுதியளித்தன் படி பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக என்.ஐ.ஏ அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதான ஆறு பேரும் ஜமேஷா முபினுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியதாகவும் வெடிப்பொருள் நிரப்பட்ட காரை வெடிக்க வைக்கும் IED உபகரணம், வெடிப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை அவர்கள் ஆன்லைன் மூலம் வாங்கியதாகவும் என்.ஐ.ஏ கூறியுள்ளது.
மேலும், இன்று நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர்களின் வீடுகளில் இருந்து டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.