வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக, வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றார்.
இதன் காரணமாக இன்றும் - நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும், 11,12ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.
சென்னையை பொறுத்தவரையில் வரும் 11,12ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறிய பாலச்சந்திரன், காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுவடைய வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார்.