சதுரங்க வேட்டை பட பாணியில் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால், மாதம் 15 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக ஆசைகாட்டி, ஒரு லட்சம் பேரிடம் கோடிக்கணக்கில் முதலீடு பெற்று கம்பி நீட்டிய, தமிழ்நாட்டின் தொழில் அதிபர்களான தந்தை- மகன் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சதுரங்க வேட்டை நாயகன் பாணியின் நிஜத்தில் தன்னை ஒரு சாதனை நாயகனாக காட்டிக்கொண்டு அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி மோசம் செய்த குற்றச்சாட்டுக்குள்ளான அலெக்சாண்டர் சவுந்தரராஜன் இவர் தான்..!
ஹிஜாவு என்ற பெயரில், மலேசியாவில் ஆயில் நிறுவனம் நடத்துவதாக கூறி அறிமுகப்படுத்திக் கொண்ட சவுந்தரராஜனும், அலெக்சாண்டரும் சேர்ந்து, ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாக ஆசைகாட்டி, ஏராளமானோரிடம் முதலீடுகளை பெற்று, தவிக்க விட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.
வசூல் செய்யப்பட்ட பணத்தை துபாய், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள எண்ணெய் கிணறுகளில் முதலீடு செய்து, லாபம் பெறுவதாக கூறி, பொதுமக்களை ஏமாற்றியதாக புகாரில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர்களை சேர்த்து விடுபவர்களுக்கு, மாதாமாதம் கமிஷன் தொகையும் கொடுக்கப்பட்டதால், முதலீடு செய்த பலரும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, தங்கள் நண்பர்கள் - உறவினர்கள் பலரையும் இந்த நிறுவனத்தில் சேர்த்துள்ளனர். அவ்வாறு பணம் வசூல் செய்து கொடுத்தவர்களில் சிலர், புகார் அளிக்க வந்தபோது சிக்கிக்கொண்டனர்.
அதுபோன்று பணம் வசூல் செய்து கொடுத்த முகவர்களை முற்றுகையிட்டு, பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து பல மணி நேரமாக பணத்தை முதலீடு செய்தவர்கள் திரண்டதால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.
பாதிக்கப்பட்ட நபர்களில் சிலரை மட்டும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைத்து புகார்களை பெற்றுள்ளனர். எத்தனை விழிப்புணர்வு விளம்பரங்களை போலீசார் வெளியிட்டாலும், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அவதிக்குள்ளாவது வாடிக்கையாகி வருகின்றது.