திருவாரூரில் 2 கிலோ மீட்டர் நீளமுடைய தார் சாலை அமைப்பில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுப்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சத்திரக்கட்டளை - புதுப்பத்தூர் ஆற்றுப்பாலம் இடையேயான சாலை சேதமடைந்து குண்டும்-குழியுமாக காணப்படுவதால், அடிக்கடி விபத்து ஏற்படும் சூழல் உருவாகுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, வார்டு உறுப்பினர் ஒருவர் முதல்வரின் தனி பிரிவிற்கு, இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லையென்றும், உடனடியாக சாலை வசதி அமைத்து தரவேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
2021 நிதியாண்டில் உலக வங்கி உதவியுடன், நெடுஞ்சாலை துறையினால் தார் சாலை அமைத்துத் தரப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.