திருவாரூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் மெயின் ரோடு திருவாசல்பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் மாரியம்மாளுக்கு மருந்து கொடுக்கும் நிகழ்வு விக்னேஷ் இல்லத்தில் நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது தக்காளிசாதம், தயிர் சாதம், புளி சாதம், பிரிஞ்சி சாதம், கருவேப்பிலை சாதம் மற்றும் லெமன் சாதம் ஆகியவற்றுடன் சிக்கன் பிரியாணியும் பரிமாறப்பட்டுள்ளது.
உணவு அருந்திய கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருதுதவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 5பேர் திருவாரூர் அரசு மருத்துவமனையிலும், கர்ப்பிணி பெண்ணின் தந்தை அடியக்கமங்கலம் அரசு மருத்துவமனையிலும் 4 வயது குழந்தை ஒன்று திருவாரூர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கர்ப்பிணி பெண் மாரியம்மாள் திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலங்குடியை சேர்ந்த செல்வ முருகன் என்பவர் உடல்நிலை மோசமாக இருந்த தாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். திருவாரூர் தாலுகா காவல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.