திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பலூன் வியாபாரியை மிரட்டிய பிரபல ரவுடி, ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே, மெயின் கார்டுகேட், மேல புலிவார்டு சாலையில் போத்தீஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை, அர்ச்சனா ஸ்வீட்ஸ் உள்ளிட்ட பிரபல கம்பெனிகளின் கடைகள் அடுத்தடுத்து உள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அதோடு அந்த பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் முன்பு ஏராளமான இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் சென்னை சில்க்ஸ் துணிக்கடை அருகில் இரவு, சுமார் 9 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் ஆட்டோ ஒன்றும் உருக்குலைந்து போனது. அங்கு சிதறிக்கிடந்த சிலிண்டர் பாகங்கள் மூலம், பலூனுக்கு நிரப்பப்படும் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் அந்தப் பகுதியில் வட மாநில இளைஞர்கள் 2 பேர் இருசக்கர வாகனத்தில் பலூன் வியாபாரம் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற மாட்டு ரவி என்ற ரவுடி அவர்களிடம் மாமுல் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஹீலியம் நிரப்பிய கேஸ் சிலிண்டர் அருகே நின்று கொண்டு மாட்டு ரவி புகைப்பிடித்ததால் சிலிண்டர் வெடித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தில் ரவுடி மாட்டு ரவி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த கோட்டை காவல்துறையினர் விரைந்து சென்று ரவுடி மாட்டு ரவியின் உடலை கைப்பற்றி சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.