புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆளுங்கட்சி பிரமுகரின் தூண்டுதலின் பேரில் பொய் வழக்குப் பதிவு செய்து தனது கணவரையும் குடும்பத்தினரையும் போலீசார் மிரட்டுவதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் மனைவி கோகிலா என்பவர் நிலப்பிரச்சனையில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியேவந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கோகிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனக்கு திமுக பிரமுகர் மற்றும் காவலர்களால் நிகழ்ந்த கொடுமை குறித்து விவரித்துள்ளார்.
கடந்த 18ஆம் தேதி தனது வீட்டின் அருகே ஏற்பட்ட பாதை பிரச்சினையில் எஸ்.ஐ. ஜெயகுமார், பெண் போலீஸ் கிரேஸி ஆகியோர் அதிகாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்து தன்னை இழுத்துச்சென்று பொய்யான வழக்கு பதிவு செய்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக குறிப்பிட்டுள்ள கோகிலா, நிபந்தனை ஜாமீனுக்கு கையெழுத்திட காவல் நிலையம் சென்ற போது திமுக பிரமுகர் குமார் என்பவரும் காவல் நிலையத்தில் பணியாற்றும் அவரது மனைவி புவனேஸ்வரியும், மற்ற போலீசாரும் சேர்ந்து, தன்னை கொலை வழக்கில் சேர்த்து திருச்சி சிறையில் வைத்து விடுவேன் என மிரட்டியதால் மன உளைச்சல் அடைந்து உயிரை மாய்த்துக்கொள்வதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.
இதையடுத்து பொய் வழக்கு புனைந்தகாக கூறப்படும் போலீசார் , திமுக பிரமுகர் குமார், கீரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமான வலியுறுத்தி கோகிலாவின் உறவினர்கள் மேற்பனைக்காடு கிராமத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில், அவர்களது உறவினர்கள் போராட்டத்தை கைவிட்ட நிலையில் அந்த பெண்ணின் சடலம் உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையிலான பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றதால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோகிலா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முதற்கட்டமாக சட்டப்பிரிவு 174 இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில், கோகிலா எழுதியாக கூறப்படும் கடிதம் குறித்து விசாரணை மேற்கொண்டு அது அந்தப் பெண்ணின் கையெழுத்தாக இருக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.