ஈரோடு மாவட்டம் ராயர்பாளையத்தில் பெண்களை 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்க வைத்த அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு எதிராக பொங்கி எழுந்த பெண்கள், பேருந்தில் ஏறி, ஓசியில போறோம்முன்னு இளக்காரம் வேண்டாம், காசை வாங்கிக் கொண்டு டிக்கெட்டை கொடு என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
5க்கும் மேற்பட்ட பெண்கள்... ப்ரீயாக போறோமுன்னு இளக்காரமா வண்டியை நிறுத்தாம போறீங்கல்ல, எங்களுக்கு இலவசம் வேண்டாம்... இந்த காசை புடிங்க டிக்கேட்டை கொடுங்க என்று ஆவேசமாக கொதிக்கும் இந்த சம்பவம்
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த ராயர்பாளையத்தில் அரங்கேறி உள்ளது
ராயர் பாளையம் கிராமத்தில் சில பெண்கள் சித்தோடு வழியாக பெருந்துறை நோக்கி செல்லும் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் கலெக்சன் குறையும், தினப்படியும் குறையும் என்பதால்
அரசு பேருந்து ஓட்டுனர்கள் அந்த பெண் பயணிகளை கண்டதும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகின்றது. 4 வதாக வந்த 12 ஆம் நம்பர் பேருந்தை மறித்து ஏறிய வேகத்தில் ஆவேசமான பெண்கள் ஓசி பயணத்தை விரும்பாமல் பொங்கி எழுந்தனர்..!
3 மணி நேரமாக வெயிலில் காத்திருந்தும் தங்களை ஏற்றாமல் புறக்கணித்து செல்வது ஏன் ? என்று கேட்டதோடு இலவசம்.. இலவசமுன்னு எல்லா விலைவாசியும் ஏறிபோச்சு, எங்களுக்கு ஓசிப்பயணம் வேண்டாம் இந்தா காசு ... டிக்கெட்ட கொடுங்க எனக்கேட்டனர்
செய்வதறியாது விழித்த நடத்துனர் பேச்சுக் கொடுத்தா சிக்கலாகிவிடும் என்று சிரித்தவாரே அவர்களிடம் இருந்து நழுவிச்சென்றார். ஏற்கனவே மதுக்கரையில் அரசு பேருந்தில் ஓசி டிக்கெட் வேண்டாம் என்று ஒரு பாட்டியை பேச வைத்து வீடியோ எடுத்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த பெண்களை தூண்டி விட்டது யார் ? என்று ர்சிய விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.