கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிப்பது சரியாக இல்லை என்று தெரிவித்துள்ள மாணவியின் தாய் செல்வி., டி.என்.ஏ. பரிசோதனை மூலம் தன்னை கொச்சைப்படுத்த முயல்வதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16வது மாநில மாநாடு கடலூரில் நடந்தது. பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதிக்காக போராடிய தாய் செல்வியை அழைத்து பாராட்டி கவுரவித்ததோடு, ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதி கேட்டு கோஷம் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து கண்ணீருடன் பேச்சை தொடங்கிய செல்வி, தனது மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க மாதர் சங்கம் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வி தனது மகள் உயிரிழந்த விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிப்பது சரியாக இல்லை என்றும் தனக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். டி.என்.ஏ சோதனை மூலம் தன்னை கொச்சைப்படுத்த முயல்வதாகவும் செல்வி குற்றஞ்சாட்டினார்.