திருவண்ணாமலையில் தனது செல்ல மகளின் பிறந்த நாளுக்காக வாங்கிச்சென்ற கேக் கெட்டு போயிருந்தது தெரியாமல், அதனை சாப்பிட்ட 5 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, குடும்பத்துடன் அந்த பேக்கரியின் வாசலில் அமர்ந்து நீதி கேட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையம் முன்பு ஹோட்டல் அசோக் மற்றும் பேக்கரி செயல்பட்டு வருகின்றது. திங்கட்கிழமை மாலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதம் தனது ஐந்து வயது மகளின் பிறந்த நாளுக்காக ஐஸ் கேக் வாங்கி சென்றுள்ளார்.
பிறந்தநாள் கேக்கை சிறுமி வெட்டிச் சாப்பிட்டவுடன் குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்ததால் ஆதம் அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து மற்றவர்கள் அந்த கேக்கை முகர்ந்து பார்த்த பொழுது கேக் கெட்டுப்போய் அழுகிய வாடை வீசியதால், குழந்தையின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இது குறித்து புகார் அளித்து விளக்கம் கேட்டனர்.அதற்கு அந்த பேக்காரி நிர்வாகத்தினர் மெத்தனமாக பதில் அளித்ததால் தனது குழந்தையுடன் ஆதம் பேக்கரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்
கெட்டுபோன கேக்கை சிறுமியின் பெற்றோர் ஆதாரத்துடன் காண்பித்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பேக்கரியை முற்றுகையிட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்
சிருமியின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை வரவழைத்து குழந்தை சாப்பிட்ட கேக்கின் மாதிரியை எடுத்துச் சென்றனர்.
அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கேக், இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் குறித்தும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட ஆய்வில் பிறந்த நாள் கேக் கெட்டுப் போனது தெரியவந்தது இதையடுத்து பேக்கரையை இழுத்து மூட உத்தரவிடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இரண்டு மாணவர்கள் பைவ் ஸ்டார் மற்றும் செவன் ஸ்டார் அசைவ உணவகத்தில் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு இறந்து போன நிலையில் தொடர்ச்சியாக கெட்டுப்போன உணவு, பொரியலில் எலி தலை பல்வேறு சம்பவங்களின் தொடர்ச்சியாக தற்போது திருவண்ணாமலையின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஓட்டல் அசோக்பவன் பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.