உதகை அருகே உள்ள மேலூர் ஊராட்சியில் துணைத் தலைவர் நாகராஜ் ஒப்பந்ததார்களிடம் கமிஷன் கேட்டு பேரம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவரை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது...
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலூர் ஊராட்சியின் தலைவராக அதிமுகவை சேர்ந்த ரேணுகா தலைவராகவும் திமுகவை சேர்ந்த நாகராஜ் துணை தலைவராகவும் உள்ளார்.
கடந்த மாதம் இந்த ஊராட்சியில் கழிவு நீர்கால்வாய் கட்டுமான பணிகள் நடைபெற்றது . கான்கிரீட் கலவை தரக்குறைவாக போடுவதாக பொதுமக்கள் நீலகிரி கலெக்டர் அம்ரித்திடம் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து பணியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வில் தரக்குறைவாக காங்கிரீட் கலவை பயன்படுத்தப்படுவதற்கு உடந்தையாக இருந்த குன்னூர் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரசேகர், பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
இந்த நிலையில் மேலூர் ஊராட்சியின் துணைத் தலைவர் நாகராஜ் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பேரம் பேசும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளுக்கு எவ்வளவு கமிஷன் கொடுக்கப்படும் என்பதெல்லாம் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது
ஒப்பந்ததாரர் ஒருவர் பதிவு செய்து வெளியிட்ட இந்த விடியோ தமிழகம் முழுதும் வைரலாக பரவியது. இதையடுத்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் மேலூர் ஊராட்சி தலைவர் ரேணுகா மற்றும் துணை தலைவர் நாகராஜ் ஆகியோருக்கு "உங்களை பதிவியிலிருந்து ஏன் நீக்கக் கூடாது" என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
பஞ்சாயத்து சட்டம் 205 மற்றும் 206 பிரிவின் படி அனுப்பட்ட இந்த நோட்டீசுக்கு அவர்கள் உரிய விளக்கம் கொடுக்காவிட்டால் கமிஷன் பேரம் பேசியதற்காக அவர்கள் இருவரது பதவியும் பறிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
அதே நேரத்தில் திமுகவின் ஊராட்சி துணைதலைவர் பேரம் பேசியதற்கு, அதிமுகவின் ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்யப்போவதாக கூறுவது ஏன்? என்று அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.