நாமக்கல்லில் ஒரே பெண்ணுக்கு 8வது திருமணம் செய்ய முயன்ற திருமண மோசடி கும்பல் போலீசில் சிக்கிய நிலையில் அப்ரூவராக மாறிய அய்யப்பன் என்பவர் போலீஸ் பிடில் இருந்து தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த சீப் ஏஜெண்டு பாலமுருகனின் கட்டளைப்படி திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் தவித்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 12க்கும் மேற்பட்ட முரட்டு சிங்கிள் மாப்பிள்ளைகளை குறிவைத்து, அவர்களிடம் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன் வாங்கிக் கொண்டு ஒரே பெண்ணை திருமணம் செய்து வைத்து மோசடியை அரங்கேற்றிய 5 பேர் கும்பல் 8ஆவது நபரை திருமணம் செய்ய வந்த போது பரமத்தி போலீசாரிடம் சிக்கியது
இந்த திருமண மோசடி கும்பலுடன் சேர்ந்து திருமணம் செய்வதையே முழு நேர தொழிலாக வைத்துள்ள நித்திய கல்யாண ராணி சந்தியா, தயக்கமே இல்லாமல் இதுவரை 6 பேரை திருமணம் செய்ததாக ஒப்புக் கொண்டார். ஆனால் அடுத்த நொடியே தனது குழந்தையை கடத்தி வைத்து புரோக்கர் பாலமுருகன் மிரட்டியதால் தான் மோசடி திருமணங்களுக்கு சம்மதித்ததாக தெரிவித்தார்.
6 வது கணவன் மன்னித்து ஏற்றுகொள்வதாக கூறுகிறான் அவனுடன் வாழத்தயாரா ? என்று கேட்ட போது எனக்கு குழந்தைகள் இருக்கு, என்னால யாருக்கும் அசிங்கம் வேண்டாம் என்று கூறி கண்ணீர் சிந்தினார் சந்தியா.
இதற்க்கிடையே மாப்பிள்ளை வீட்டில் இருந்து தப்பி வரும் சந்தியாவை பத்திரமாக தனது காரில் ஏற்றிச்செல்வதை வழக்கமாக செய்த ஓட்டுனர் ஜெயவேலை காட்டிக் கொடுத்த அப்ரூவர் அய்யப்பன் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
போலீசாரிடம் தனக்கு வாந்தி வருவதாக கூறி காவல் நிலையத்துக்கு வெளியே வந்த அய்யப்பன் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது. 8ஆவதாக திருமணம் செய்ய இருந்த மாப்பிள்ளையிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இந்த கும்பல் ஏமாற்றி வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.