தருமபுரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பூமி பூஜைக்கு இந்து முறைப்படி ஏற்பாடு செய்த திமுக ஒன்றிய செயலாளரை கடுமையாக திட்டிவிட்டுச்சென்ற செந்தில்குமார் எம்பிக்கு எதிராக திமுகவினர் ஆவேசமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான்கோட்ட வளாகத்தில் தமிழக அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன நூலகங்கள் கட்டுமான பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி , தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மஞ்சள் பூசிய செங்கலை எடுத்து வைத்து கடப்பாரையை பிடித்தபடி குழுவினருடன் ஒய்யாரமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
பூமி பூஜை முடிந்த புகைப்பட கலைஞர்கள் அங்கிருந்து சென்றதும் ஆவேசமான செந்தில்குமார் அங்கிருந்த திமுகவினரை பார்த்து அறிவில்லையா என்று திட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது. காரில் ஏறிசெல்லும் போதும் திமுக ஒன்றிய செயலாளர் சண்முகத்தை அழைத்த இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை கூப்பிடாதீர்கள் இது அரசு நிகழ்ச்சி அனைவருக்குமான நிகழ்ச்சி ஒரு மதம் சார்ந்த சடங்குகளை மட்டும் கடைபிடிப்பதாக இருந்தால் என்னை கூப்பிடாதீர்கள்.
ஒவ்வொரு இடத்திலும் பிரச்சனை செய்ய வேண்டுமா ? என தன்னை ஒரு ஸ்ட்ரிக்டான நாத்தீகராக காட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றார். இதனை கண்டு எரிச்சலைடைந்த திமுகவினர் , செந்தில்குமார் எம்.பியின் செயலுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பினர். அடுத்த எலக்ஷனுக்கு ஓட்டுக்கேட்டு வீட்டுப் பக்கம் வரும்போது பார்த்துக் கொள்கிறோம் என்றும் பிடிக்கலைன்னா பூஜைக்கு வராத... வந்து போஸ் கொடுத்துட்டு வாய்க்கு வந்தபடி பேசுற ... என்று தங்கள் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தனர்.