சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த அரசு பெண்கள் விடுதியில் இருந்த 100 மின் விசிறிகள், நூற்றுக்கணக்கான மேஜை, இருக்கை மற்றும் கட்டில் உள்ளிட்ட பொருட்களை சிறுக சிறுக திருடி விற்று கஞ்சா, மது வாங்கி பயன்படுத்திய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமூக நலத்துறையின் சார்பில் கட்டப்பட்டு பணிக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதி சாலிகிராமத்தில் செயல்பட்டு வந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பின்னர், விடுதியில் இருந்த அனைவரும் காலி செய்து விட்டு சென்றதால், கடந்த 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது.
இந்த விடுதியில் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றபோது, விடுதியில் இருந்த கட்டில், இருக்கை, மின்விசிறி என ஏராளமான பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டதால், இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் வடபழனி காவல் நிலையத்தில், வேறொரு அடிதடி புகாரில் சஞ்சய் குமார் என்ற நபரை விசாரணை நடத்திய போது, அவர் சாலிகிராமம் அரசு பெண்கள் விடுதியில் கைவரிசை காட்டிய நபர் என தெரியவந்தது. தனது நண்பர்களான சுரேஷ் மற்றும் ராம்குமார் ஆகியோருடன் சேர்ந்து திருடியது கண்டுபிடிக்கப்பட்டு மூவரையும் கைது செய்தனர்.
சஞ்சய் குமார் மீது 6 அடிதடி வழக்குகளும், சுரேஷ் மீது போதைப்பொருள் கடத்திய வழக்கும், சரித்திர பதிவேட்டு குற்றவாளியான ராம்குமார் மீது 10 -க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகளும் உள்ளன.மூவரும் சேர்ந்து அரசினர் மகளிர் விடுதி கடந்த 2 வருடமாக பயன்படுத்தாத நிலையில் இருந்ததை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கஞ்சா வாங்குவதற்கும், மது வாங்கி குடிப்பதற்கும் விடுதியில் உள்ள 93 பேன்களை இரும்பு கடையில் விற்பனை செய்துள்ளனர்.
மேலும் இரும்பு நாற்காலிகள், கட்டில்கள், பாத்ரூமில் உள்ள பீங்கான், இரும்பு குழாய்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை திருடி விற்றுள்ளனர். விசாரணையின் போது சுரேஷ் என்ற திருடன், தங்கள் மீது திருட்டு வழக்கு பதிந்தால் ஏரியாவில் அவமானமாக இருக்கும் எனவும், அடிதடியில் ஈடுபட்டதாக வழக்கு போட்டால் தான் கெத்தாக இருக்கும் என கூறி ஆர்பாட்டம் செய்துள்ளான்.
திருட்டு வழக்கு பதிவு செய்தால் நான் சாப்பிட மாட்டேன் என்று அழுது அடம் பிடித்த திருடனால் பொறுமையிழந்த போலீசார் தக்க விசாரணை நடத்தி வழிக்கு கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.
ஒருவழியாக மூவரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, வழக்கமான நடைமுறையாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் உங்களை அடித்தார்களா என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது? அதற்கு சுரேஷ் என்ற திருடன் மட்டும்... ஆம் ஐயா... காவல்துறையினர் அன்பால் அடித்தார்கள் என கூறியதால், அழைத்து சென்ற காவல் துறையினர் செய்வதறியாமல் நின்றுள்ளனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி சுரேஷ் உட்பட மூன்று பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து சிறையில் அடைத்தனர்.